சாபத்தில்_சிறுதீவு
யார்
இட்ட சாபமோ
பசுந்தீவு பஞ்சத்தில்?
சீதையே
உன்னை சிறைகொண்ட பொழுதில்
நீயிட்ட சாபமோ?
ராமா
உன்னவளை தொலைத்த
வேதனையின் சாபமோ?
அஞ்சலை புத்திரன்
வாலில் தீவைக்க- அக்
கோபத்தின் சாபமோ?
லட்சுமணன்
மேனியை அம்பொன்று துளைக்க
அவனிட்ட சாபமோ?
ராவனா
மரணத்தை தந்த யுத்தத்தின் முடிவில்
நீ கொடுத்த சாபமோ?
விஜயனே
உன்னை வாழவைத்த தீவுக்கு
நீ சாபமிட்டாயோ?
குவேனியே
விஜயன் கைவிட்ட விரக்தியில்
நீ தொடுத்த சாபமோ?
துஷ்ட காமினியே
குடும்ப தகராரில் இத்தீவுக்கு
தந்தாயோ சாபம்?
எள்ளாலராசனே
உன் ரத்தம் சிந்துகையில்
இட்டாயோ சாபம்?
காட்டிக் கொடுத்த
கோபத்தில் விக்கிரம ராஜசிங்கனே
விதைத்தாயோ சாபத்தை?
வெள்ளையனே போவென
நாமிட்ட கோஷத்தில் கொதித்ததுவோ
அவன் சாபம்?
இந்நாட்டுப் பிரஜை
இல்லை நீ என்றதுமே
மலையகத் தமிழர் போட்ட சாபமோ?
சுதந்திரம் வாங்கிவந்து
சுதந்திரம் பறித்ததும் வடக்கின் தமிழர்
வாய்வழி சாபமோ?
காவலுக்கு நின்றோரே
காமத்தை கக்கியதால்- மங்கை மனம்பேரியின் சாபமோ?
யாழ் நூலகம் எரிந்து
புகையாகி போகையிலே அய்யோ என்றுயிர் விட்டோர் சாபமோ?
பதின்மூன்று ராணுவம்
உடல்சிதறி செத்தபோது
சிதறிய சாபமோ?
எண்பத்திமூன்றில்
தேடித்தேடி தமிழன் உடலெரித்து கொன்றதன் சாபமோ?
ஆட்சிக்கெதிராக ஆயுதம்
தரித்த சிங்களவர் பிணங்களை
வீதியில் குவித்த சாபமோ?
புனிதப்பல் சுமந்த
புத்தனின் மாளிகையை
தகர்த்ததனால் சாபமோ?
செஞ்சோலை சிறார்களின்
நெஞ்சினிலே குண்டுகள் விழுந்ததால்
வந்ததோ சாபமோ?
முல்லிவாய்க்காலில்
முலையறுத்து பெண்களை
கொன்றதனால் சாபமோ?
நந்திக்கடல் கலந்த
ரத்தத்தை பார்த்து; கடலழுத
கண்ணீரின் சாபமோ?
முப்பது வருடங்கள்
ஓயாமல் வெடித்த
குண்டுகளின் சாபமோ?
பிணவாடை ஓயமுன்னே
பட்டாசு கொளுத்தி பட்ச்சோறுண்ட
பாவத்தின் சாபமோ?
காணாமல்
போனோரின் உறவுகள் ஒப்பாரி
வைத்த சாபமோ?
உயிர்த்தெழுந்த ஞாயிரில்
உயிர் விட்டோர்
சாபமோ?
முக்காடு கழட்டி முஸ்லீம் மங்கையரை
அவமானம் செய்ததால்
அல்லாவின் சாபமோ?
மொழியால் பிரிந்து
முகம் சிரிக்க மறுத்ததனால்
முளைவிட்ட சாபமோ?
மதம் வளர்த்து இனம் பிரித்து
மனிதம் கொன்றதனால்
வந்ததுவோ இச்சாபம்.
கூட்டாட்சி நடத்தி
கொள்ளையடித்த
குடும்பத்தின் சாபமோ.
யார் இட்ட சாபமோ
பஞ்சத்தில் சிறு தீவு
பட்டினியில் பல மக்கள்.